அன்சாருல்லா வழக்கும் என்.ஐ.ஏ சோதனைகளும் !!


அன்சாருல்லா வழக்கும் , என்.ஐ.ஏ சோதனைகளும் !!

தற்போது தமிழ்நாட்டில் NIA (தேசிய  புலானாய்வு முகமை)  விசாரித்து வரும் வழக்கிற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் "தமிழ்நாடு அன்சாருல்லா வழக்கு" .

கடந்த 09-07-19 அன்று என்.ஐ.ஏ
Case RC-16/2019/NIA/DLI (Tamilnadu Ansarulla Case) ன்படி வழக்கு பதிவு செய்தது . அவ்வழக்கில் சென்னையை சேர்ந்த செய்யது முகம்மது புகாரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஹசன் அலி 2 வது குற்றவாளியாகவும், அதே ஊரை சேர்ந்த  ஹாரிஸ் முகம்மது 3 வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.




இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்ட (இபிகோ) குற்றப்பிரிவுகள் 120(B) , 121A, 122 மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(உபா) பிரிவுகள் 17,18, 18-B, 38 மற்றும் 39 ஆகிய பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவில் " அன்சாருல்லா " என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தில் இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வரவும் , அதற்காக நிதி வசூலித்ததாகவும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.

என்.ஐ.ஏ வின் முதற்கட்ட சோதனை !

என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 13-07-19 அன்று சென்னையிலுள்ள செய்யது முகம்மது புகாரி(A1) யின் அலுவலகத்திலும், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள ஹசன் அலி (A2) மற்றும் ஹாரிஸ் முகம்மது (A3) வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் உள்ளூர் போலீசாரின் துணையுடன் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையின் போது 9 செல் போன்களும், 15 சிம் கார்டுகளும், 7 மெமரி கார்டுகளும், 3 லேப்டாப்களும், 5 ஹார்டு டிஸ்களும், 6 பென் டிரைவ்களும், 2 டேப்லெட்களும், 3 சிடி/டிவிடிக்களும்,  பேப்பர்கள், நோட்டீசுகள், போஸ்டர்கள் மற்றும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலானாய்வு முகமை தெரிவித்துள்ளது. 

இவ்வழக்கில் மொத்தம் 17 பேர் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 14 பேர் துபாயில் கைது செய்யப்பட்டு இரண்டு கட்டமாக இந்தியா கொண்டு வரப்பட்டவர்கள். 3 பேர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டவர்கள்.

இரண்டாம் கட்ட சோதனை !

இந்நிலையில் 20-07-19 அன்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட  முகம்மது இப்றாகீம்(A4), முகம்மது சேக் மைதீன் (A5), மீரான் கனி (A6), குலாம் நபி ஆசாத் (A7), அகமது அசாருதீன் (A8), தௌபீக் அகமது (A9), முகம்மது இப்றாகீம்(A10), முகம்மது அப்சர்(A11), ரபி அகமது (A12), முன்தசீர் (A13), உமர் பாரூக் (A14),  முகைதீன் சீனி சாகுல் ஹமீது (A15), பைசல் ஷெரீப் (A16) மற்றும் பாரூக் (A17) ஆகியோர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.



மேற்படி சோதனையின் போது 1 லேப்டாப், 7 செல்போன்கள், 3 மெமரி கார்டுகள் , 1 ஹார்டு டிஸ்க், 2 பெண் டிரைவ்கள், 1 இன்டெர்நெட் டாங்கிள், 9 சிடி/ டிவிடி க்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றியதாகவும் மேற்படி ஆவணங்கள் அனைத்தையும் சென்னையிலுள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

களத்தில் தமுமுக மற்றும் ம ம க வினர் !! 

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகம்மது இப்றாகீன் வீடு மற்றும் அவருடைய மனைவி வீட்டில்  20-07-19 சனிக்கிழமை  காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் திருநெல்வேலி மாநகர போலீசாரின் உதவியுடன் திடீர் சோதனை நடத்தினர்.




NIA அதிகாரிகள் சோதனை முடியும் வரை அப்பகுதிக்குள் யாரையும் நுழையவிடவில்லை. பின்னர் நமது தமுமுக , ம ம க குழுவினர் கைது செய்யப்பட்டுள்ள முகம்மது இப்றாகீமின் வீட்டுக்கு சென்ற போது அங்கு அவருடைய தாயார் 80 வயதுள்ள தௌலத் மற்றும் மனநிலை சரியில்லாத  சகோதரி ஹயர் நிசா ஆகியோர் மட்டுமே இருந்தனர்.அவர்களிடம் விசாரித்த போது எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை. அவனை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். வீட்டில் சோதனை செய்து அவனுடைய பழைய விமான டிக்கெட், பாஸ்போர்ட் ஜெராக்ஸ் மற்றும் வீட்டு பத்திரம் ஜெராக்ஸ் ஆகியவற்றை மட்டுமே எடுத்து சென்றனர் என்று அழுத படியே கூறினார்.

தவறான வழக்கு

முகம்மது இப்றாகீமின் மனைவி வீட்டிற்கு சென்று விசாரித்த போது அங்கு 1 1/2 மாத கைக்குழந்தையுடன் மனைவி செய்யதலி அழுது கொண்டிருந்தார். மேலும் முகம்மது இப்றாகீம் பற்றி கேட்ட போது அவர் தங்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. 3 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் சுமார் 15 வருடங்களாக துபாயில் வேலை பார்த்து து வருகிறார். 10 ம் வகுப்பு முடித்து விட்டு ஐ.டி.ஐ யில் எலக்ட்ரீஷியன் படிப்பு படித்துள்ளார். முதலில் துபாயில் ஈ.டி.ஏ கம்பெனியில் லிப்ட் டெக்னீசியனாக வேலை பார்த்தார். கடந்த 7 வருடங்களுக்கு முன் தான் துபாய் அரசாங்கத்தில் வேலை கிடைத்தது.

அவர் 5 வேலை தொழுகையை தவறாமல் நிறைவேற்றுவார். எந்த இயக்கத்திலும், கட்சியிலும் கிடையாது. சும்மா இருக்கும் நேரத்தில் இஸ்லாமிய அழைப்பு பணிகளில் மட்டுமே ஈடுபடுவார். துபாயிலும் அதையே செய்து வந்தார். அவருக்கு தீவிரவாதத்தில் நம்பிக்கை இல்லை. அவர் தவறாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 9 மாதத்திற்கு முன்னர் தான் எனது கணவர் ஊருக்கு வந்து விட்டு போனார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் துபாயில் DEVA  WATER ELECTRICITY என்ற அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது எனது கணவர் அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவர் துபாய் போய் 3 மாதத்தில் கைது செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதம் நடந்த  இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்புடன் தொடர்பு படுத்தி ஊடகங்களில் செய்தி வெளியாவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று கதறி அழுதார்.



மேலும் NIA அதிகாரிகள் சோதனையின் போது தான் பயன்படுத்தி வந்த செல்போனை மட்டும் வாங்கிச் சென்றதாகவும், வேறு எதுவும் கைப்பற்றவில்லை என்றும் கூறினார்.
தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ வின் இந்த வழக்கும் , அதிரடி சோதனைகளும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வலைதளங்கள் பயன்படுத்துவோரிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர் அல்பி நிஜாம்
திருநெல்வேலி

நன்றி @ மக்கள் உரிமை வார இதழ்

Comments

Popular posts from this blog

கலைஞர் எழுதிய குறிப்புரை !

தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு !

14 நாட்கள் ஊரடங்கு ! எதெற்கெல்லாம் அனுமதி ? எதெற்கெல்லாம் அனுமதி இல்லை ?